புதுவருட ஆரம்பத்தில் ரணில்-சஜித் நேரடி சந்திப்புக்கு முயற்சி
2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முன்னாள் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அகிலவிராஜ் காரியவசம், ருவான் விஜேவர்தன மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
முக்கிய சந்திப்பு
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச தனித்து பங்கேற்றிருந்தார். ரணில் - சஜித் நேரடி சந்திப்பு தவிர இந்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்ற காரணிக்கு அப்பால் அனைத்து கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியாக பயணத்தை தொடர்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன் மூலம் இரண்டு கட்சிகளும் தனித்துவத்தன்மையுடன் செயல்பட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட்டு தன்னுடன் பயணித்த ஷெஹான் சேமசிங்க, பிரமித பண்டார தென்னகோன் மற்றும் காஞ்சன விஜேசேகர உள்ளிட்டோரையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரணிலின் கோரிக்கையாகவுள்ளது.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் அதனை விரும்பவில்லை. இவ்வாறான நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் ஜனவரிக்குள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் ஜனவரிக்குள் பிரத்தியேக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.