வெளிநாட்டு தூதரங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களின் இராஜதந்திர பதவிகள் குறித்து வெளியான தகவல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் இறுதி செய்து வருகிறது.
இதன்படி முன்னாள் தலைமை நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கடமைகளை ஏற்றுக்கொள்கிறார்.
முன்னதாக, அந்த பதவியில் இருந்து முன்னாள் தலைமை நீதியரசர் மோகன் பீரிஸ், கடந்த ஆண்டு நவம்பரில் திரும்ப அழைக்கப்பட்டார்.
அரசியல் நியமனம்
இலங்கை வெளியுறவு சேவையின் தற்போது மூத்த உறுப்பினரான யசோஜா குணசேகர, கென்பெராவில் உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் 2011 முதல் 2014 வரை இந்தியாவிற்கான துணை உயர்ஸ்தானிகராக இருந்த மகிசினி கொலோன்னே புதுடில்லியில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரங்களுக்கு தொழில் நிபுணத்துவம் இல்லாத அரசியல் நியமனங்களும் வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
அவர்களில் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வியாளரான பேராசிரியர் ஜனக் குமாரசிங்கவும் ஒருவராவார்.
அண்மையில் ஓய்வு பெற்ற இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவும் பதவி ஒன்றில் அமர்த்தப்படவுள்ளார்.
மாற்று உறுப்பினர்கள் நியமனம்
இந்தநிலையில் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்கவின் நிர்வாகம் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட 16 தூதரகத் தலைவர்களை திரும்ப அழைத்தது
இதனையடுத்து, தேவைகளுக்கு ஏற்ப, வெளியுறவு சேவையிலிருந்தும் பிற தொழில்களிலிருந்தும் மாற்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜித ஹேரத் அப்போது கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |