ஜனாதிபதி கோட்டபாயவை புறக்கணிக்கும் இராஜாங்க அமைச்சர்கள் - உள்ளக மோதல்கள் தீவிரம்
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விழாவினை இராஜாங்க அமைச்சர்கள் சிலர் புறக்கணித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கைத்தொழில் சிறப்பு விருது வழங்கும் விழாவை கைத்தொழில் அமைச்சுக்கு உட்பட்ட மூன்று அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. லொஹான் ரத்வத்த, தயாசிறி ஜயசேகர மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்த மூன்று அரச அமைச்சுகளின் இராஜாங்க அமைச்சர்களாக உள்ளனர்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமல் வீரவன்சவுடன் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் அதிகாரம் தொடர்பான மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறைமுகங்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பெயரளவில் தனக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதென பகிரங்கமாக கூறியதுடன் அரசாங்கத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் பல இராஜாங்க அமைச்சுக்களில் பதவி வகிக்கும் பலர் பதவிக்காக மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அமைச்சரவையின் போது இராஜாங்க அமைச்சர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லையென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




