மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல்
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Brian Udaigwe ஊடாக பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மின்னஞ்சல் மூலமாக இந்த பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல்
ஆயரின் பதவி விலகல் கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜீவராஜ் தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிப்புக்குள்ளான ஆயர் அவர்கள் இதன் காரணமாக பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஆயராக இவர் திகழ்கின்றார்.
எனினும், அடுத்து வரப் போகும் ஆயர் எங்கிருந்து தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மறைமாவட்டம் தொடர்பான சர்ச்சைகள்
எவ்வாறாயினும், ஆயரின் கோரிக்கை தாமதமின்றி ஏற்று கொள்ளப்பட்டு விரைவில் புதிய ஆயர் ஒருவர் நியமிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவரையான காலப்பகுதியில், அருகில் உள்ள ஆயர் ஒருவரின் கீழ் பெறுப்புக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மறை மாவட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அண்மையக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆயர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை, அருட்தந்தையர்களும் சுமத்தியிருக்கின்றனர்.
இந்தநிலையிலேயே, ஆயரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யோசப் பொன்னையா இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 அக்டோபர் 12 ஆம் திகதி பிறந்தார்.
புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
யோசப் பொன்னையாவின் சேவைகள்
யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியிலமர்த்தப்பட்டார். இவர் பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.
மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
2008 பெப்ரவரியில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை-ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.
2012 சூலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |