தினேஷ் ஷாப்டர் மரணத்திற்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் அந்நியரால் ஏற்படுத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவரவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், அரசாங்க மரண விசாரணை அதிகாரிகள் மரணத்திற்கான காரணம் சயனைட் உட்கொண்டமை எனவும் கூறியுள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
இதற்கமைய, தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மன்றில் சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் திகதி தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் இல்லத்திலிருந்து பொரளை மயானம் வரையிலான பல சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அவர் மதியம் 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாக ஆய்வு செய்ததற்கமைய, அவரது கழுத்தில் கண்டெடுக்கப்பட்ட கேபிளைப் போன்ற வயர் அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது ஓட்டுநர் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இருந்தது.
வீட்டில் சிக்கிய பொருட்கள்
"மேலும்,ஷாப்டரின் கழுத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேபிள் டேப்பைப் போன்ற ஒரு கேபிள் டேப் அவரது வீட்டில் மனைவியின் தாயின் அறைக்கு செல்லும் நடைபாதையில் கிடைத்தது. இந்த இரண்டு கேபிள் டேப்புகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதைக் கவனித்ததால், நாங்கள் அரச ஆய்வாளரிடம் இருந்து அறிக்கை பெற வேண்டியிருந்தது.
மேலும், இறந்தவரின் கழுத்தில் உள்ள டிஷ் டிவி கேபிள் பெல்ட்கள் 01 மற்றும் 02 எனவும், வீட்டில் இருந்த டிஷ் டிவி கேபிள் பெல்ட்கள் 03 முதல் 41 எனவும் இலக்கமிடப்பட்டிருந்தன.
மேலும், அவரின் கைகளில் கட்டப்பட்டிருந்த ZIP TIE தினேஷ் ஷாப்டரின் வீட்டிலும் 11 ZIP TIE டேப்புகள் காணப்பட்டன. மேலும், அவர் தனது வீட்டிலிருந்து பொரளை மயானத்திற்கு பயணித்தபோது, அவர் வேறு எந்த வாகனத்தையும் கடந்து செல்லவில்லை.அவரை யாரும் தொடர்வதும் விசாரணையின் போது அடையாளம் காணப்படவில்லை.
மேலும், காரில் வேறு யாரும் பயணிக்கவில்லை. பொரளை மயானத்தில் பணிபுரியும் இருவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றோம். காரில் இருந்து ஒருவர் இறங்கியதற்கு எந்த காட்சியும் காணப்படவில்லை எனவும் புலனாய்வாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மனநல சிகிச்சை
மேலும், தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் அவரின் மனைவியிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணையில், தினேஷ் ஷாப்டர் சில காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
அதிக கோபம் மற்றும் வியாபாரத்தில் ஆர்வம் இல்லாத நிலையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளமையும், மனநல மருத்துவர் நில் பெர்னாண்டோவிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
தொழில் சார்ந்து பல தொழிலதிபர்களிடம் பண பரிவர்த்தனை செய்து வியாபாரத்தில் பெரும் நஷ்டம் அடைந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரையான விசாரணையின் படி, ஷாப்டரின் மரணத்திற்கு அந்நியர் காரணமாக இருக்கலாம் என்பதற்கு சாட்சியங்கள் இல்லை. இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் மன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய வழக்கை எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.




