கிழக்கு மாகாண வளங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: தினேஸ் குணவர்த்தன
கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தேவையான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் - புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
விவசாயிகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் விவசாயம், மீன்பிடி மற்றும் உணவு உற்பத்திகள், பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சத்துணவு திட்டங்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் காலத்தில் விவசாயத்துறையினை மேம்படுத்துவது குறித்தும் அதற்காக தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அவற்றினை சீர்செய்வதற்கு தேவையான வழிவகைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பொதுமக்கள் வங்கிகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதன்போது வறுமை ஒழிப்பினை நோக்காக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வஸ்ம திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொதுமக்கள் வங்கிகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், அமைச்சர் நசீர் அஹமட் , இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் உட்பட இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



