வாள்வெட்டு பகுதிக்கு பொலிஸாருடன் களம் இறங்கிய திலீபன் எம்.பி
வவுனியா, கல்மடுப்பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றதாக தெரிவித்ததையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அழைத்துக்கொண்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் களம் இறங்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று (17.05) கசிப்பு உற்பத்தி நிலையமும் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா, கல்மடு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அக்கிராம மக்கள் சிலர் கசிப்பு காய்ச்சிய இடத்தை நேற்றிரவு முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு நின்றவர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் இரவு கொண்டு வந்ததையடுத்து, உடனடியாகவே பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அழைத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை அவதானித்து குழப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்.
அத்துடன், காலையில் கசிப்பு காய்ச்சிய இடம் முற்றையிடப்பட்டது. கல்மடு காட்டுப்பகுதியிலும் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அங்கும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 6 பெரல் கசிப்பு, இரண்டு கான்கள் என்பன அப்பகுதி இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.