தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வால் வந்த வினை: திகாம்பரம் பகிரங்க குற்றச்சாட்டு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைக் வற்புறுத்துவதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று(05.02.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வேலை நிறுத்தம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 400 ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கூறியுள்ளது. இந்த மாதம் 10ஆம் திகதி தான் அது கிடைக்கவுள்ளது. ஆனால் சம்பளத்தை அதிகரிக்கச் கூறியவுடன், இதுவரை 20 கிலோ கொழுந்து பறித்தவர்களிடம் நிறுவனங்கள் தற்போது 25 கிலோவைக் கொண்டுவருமாறு கேட்கின்றன.

தோட்ட முகாமையாளர்கள் தமக்குத் தேவையான வகையில் வேலைகளை நிறுத்துகிறார்கள்.
இன்று மஸ்கெலியாவில் உள்ள தோட்டமொன்றில் 7 பேரின் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி வேலை நிறுத்தப்பட்டால் அவர்கள் எப்படி வாழ்வது? அதனால் நான் அரசாங்கத்திடம் ஒன்று கூற விரும்புகிறேன். உடனடியாக இந்தக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுங்கள்.
மேலும், நாம் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்போம்.
பணிப்புறக்கணிப்புகளை ஆரம்பிப்போம். எமக்கு வேறு வழியில்லை. நாம் அதிகாரத்தில் இருந்த போது நிறுவனங்கள் இவ்வாறு ஆட்டம் போடவில்லை. நிறுவனங்களுக்க நல்ல இலாபம் உள்ளது.
இது போன்று அவர்கள் பொய் கூறுகிறார்கள், இலாபம் இல்லையென்றால் கம்பனிகளை ஒப்படைத்துவிட்டுச் செல்லலாமே. எப்போதும் இலாபத்தை மட்டுமே பார்ப்பது நல்லதல்ல.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.