நாமல் ராஜபக்ச மற்றும் நிசாம் காரியப்பரை சாடிய திகாம்பரம்
2026 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச தினசரி ஊதிய உயர்வை எதிர்த்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் நேரடியாக சாடினார்.
நேற்றையதினம்(13) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தினசரி ஊதியம்
அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினைகளைத் தீர்க்க ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கியதற்காக அவர் அரசாங்கத்தைப் பாராட்டினார்.

எனினும், அரசாங்கம் இந்த ஊதியம் ஒரு நாளைக்கு வழங்கப்படுமா அல்லது 25 நாட்கள் வருகை தருவதன் அடிப்படையில் வழங்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். "இந்த சமூகம் கடந்த 200 ஆண்டுகளாக நாட்டுக்காக உழைத்துள்ளது.
எனவே இந்த ஊதிய உயர்வு வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்ற விமர்சனம் அர்த்தமற்றது," என்று அவர் வாதிட்டார்.
மேலும், தங்கள் ஆட்சிக் காலங்களில் ஊதிய உயர்வை வழங்கத் தவறிய எதிர்க்கட்சிகள் இந்த முடிவை விமர்சிக்காமல், "இந்த அரசாங்கத்தால் ஊதிய உயர்வை வழங்க முடிந்தால், நாம் அதைப் பாராட்ட வேண்டும், எங்கள் ஆதரவைக் கூற வேண்டும்," என்று வலியுறுத்திய அவர், தினசரி ஊதியத்தை அதிகரித்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியையும் தெரிவித்தார்.