டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்.. அவசர உதவி கோரும் பொலிஸார்
டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(27) அதிகாலை குறித்த சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர், பொகவந்தலாவ - பெற்றோசோ பகுதியில் மறைந்திருந்த நிலையில், அப்பகுதி மக்களின் உதவியோடு கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுப் பிறப்பித்திருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது, சந்தேகநபருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சிறைச்சாலை அதிகாரிகள் நேற்றையதினம்(26) அவரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்ய சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் மீண்டும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய மீண்டும் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.



