இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் அமைப்புகள் மறுப்பு!
இலங்கையில் முதலீடுகளை செய்ய பிரித்தானிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாட்சிக்கு இலங்கை அரசாங்கம் உடன்பட வேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பத்து புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடு செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழ் இனப்படுகொலையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வடக்கு, கிழக்கை தனியான பிரதேசங்களாக அங்கீகரிக்க வேண்டும் என இந்த புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவில்லை என அந்த அமைப்புகள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.