புலம்பெயர் தமிழ் சமூகம் முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகள்- ஆராய குழுவை நியமித்த நீதியமைச்சர்
புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடன் தொலைபேசி வழியாக முதலில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அமைச்சர் இந்த குழுவை நியமித்துள்ளார்.
கடந்த வாரம் தொலைபேசி ஊடான இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் சமூகம் நிபந்தனைகள்

கனடாவை தளமாக கொண்ட நீதி மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பு , அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட ஏனைய நான்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுடன் அமைச்சர் இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
கனேடிய அமைப்பானது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, குற்றச்சாட்டில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்ட ரோய் சமாதானம் என்பவர் தலைமையில் இயங்குகிறது.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பாக புலம்பெயர் தமிழ் சமூகம் இரண்டு பிரதான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும் தொந்தரவுகளை நிறுத்துவது ஆகியனவே அந்த நிபந்தனைகள்.
அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
விஜயதாச ராஜபக்சவின் கருத்து
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் தொலைபேசி ஊடான கூட்டத்தை தானே ஆரம்பித்ததாகவும் அவர்களில் கவலைகள் குறித்து கவனமாக செவிமடுத்ததாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
இதனையடுத்து மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ள நீதியமைச்சர், கடந்த வெள்ளிக்கிழமை குழுவின் உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
“நாம் இந்த பிரச்சினையை அடுத்த தலைமுறையினர் தீர்க்க நாம் விட்டு விடக்கூடாது. முடிந்தளவும் விரைவாக இந்த குறைப்பாடுகளை களைந்து நாட்டைக் கட்டியெழுப்ப நாம் முயற்சிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பலவந்தமாக கையகப்படுத்தி இருக்கும் காணிகள் சம்பந்தமாகவும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் விடயங்களை முன்வைத்தனர்.
“காணிகளை அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு விடுவிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை.” எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 22 பேருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிறைச்சாலையில் நெரிசல்களை குறைப்பதற்காக குற்றவியல் வழக்குகள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam