முல்லைத்தீவில் ஆலய வழிபாட்டைக் குழப்பும் யாசகர்கள் : மாற்றங்களைக் கோரும் பக்தர்கள்
ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஆலயங்களின் வாசலில் யாசகம் கேட்போரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அது தொடர்பில் பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகின் எல்லா பொருளாதார வளர்ச்சியுற்ற நாடுகளிலும் தங்கியிருப்போருக்கான உதவிகள் கவனமெடுக்கப்பட்டு வழங்கப்படுவது இயல்பானதாகும்.
இலங்கையில் தங்கியிருப்போருக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோர் ஏனையவரிடம் இருந்து இரந்து வேண்டி வாழும் அவலம் தொடர்வதை அவதானிக்கலாம்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் திங்கள் வழிபாட்டுக்காக சென்று வரும் பக்தர்களிடையே அங்கு வந்திருக்கும் யாசகர்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் சனாதிபதி நிதியம் உள்ளிட்ட சமூக நலன் பேணலுக்கான நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் வினைத்திறன் அற்றவையாக இருப்பதாக அவை மீது குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
பெற்ற முடிவுகள் தந்த முடிவு
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் யாசகர்கள் என இரு சாரரிடமும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துக்களை பெற்றிருந்தேன்.
இரு சாராரிடமும் பெறப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பெறப்பட்ட முடிவாக அவர்களில் யாசகர்கள் ஒரு ஒழுங்கு முறைக்குள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. யாசகர்களின் செயற்பாடு ஏனையவர்களுக்கு இடையூறாக அமைகிறது என்பதாகும்.
பொது மக்கள் கூடும் இடங்களில் எந்தவொரு நிகழ்வும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இயங்குவதற்காக பொது ஒழுங்குபடுத்தல் அவசியமாகும் என்பது நிர்வாகவியலில் முதன்மையான விடயங்களில் ஒன்றாகும்.
ஆலயங்களுக்கு செல்லும் நோக்கமே மன அமைதியை பெற்றுக்கொள்வதற்காக. ஆயினும் ஆலய வழிபாட்டிற்கு வருவோரிடம் பிச்சை கேட்பது அவர்களுக்கு இருக்கும் மனநிலையை மோசமாக்கி மன அழுத்தத்தினை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும் என்பது உளவள ஆலோசகரின் கருத்தாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
தங்களிடம் இருக்கும் மனநிலைக் குழப்பத்திற்கு தீர்வாக ஆலயங்களை நாடுவோர் ஆலயங்களில் தங்களுக்கு இறை சிந்தனை மட்டுமே ஏற்படும்.இதனால் புறச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு மன அமைதியைப் பெற முடியும்.அடுத்து வரும் தங்களின் செயற்பாடுகளை முழு மூச்சுடனும் கூடிய கவனத்துடனும் செயற்படுத்த முடியும் என்ற உள்ளார்ந்த மன நிலையுடனே அவர்கள் ஆலயங்களை நாடுகின்றனர்.
அதற்கு இடையூறாக யாசகர்களின் செயற்பாடுகளும் அவர்களது தோற்றமும் அமைந்து விடுகின்றதனை அவர் சுட்டிக் காட்டியிருந்தமையும் இங்கே நோக்கத்தக்கது.
கொடுக்க முடியவில்லையே! என்ற ஏக்கத்தோடு அவர்களது துயரத்திலும் பங்கெடுக்க ஏழ்மையானது தம்மை தூண்டிவிடுவதாலேயே இத்தகைய அசௌகரியம் ஏற்படுகின்றது.ஏழ்மை இலகுவாக மனிதர்களின் மனங்களை ஆக்கிரமிக்க வல்லது என உளவளத்துறைசார் செயற்பாட்டாளர்கள் உரைக்கின்றனர்.
யாசகர்கள் என்ன சொல்கின்றார்கள்
கடைசி பங்குனித் திங்கள் வழிபாட்டுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் சென்றிருந்த போது காலை முதல் யாசகர்களை கடந்து செல்லும் நிலை மாலை வரை தொடர்ந்திருந்தது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் யாசகர்கள் வந்திருந்தனர் என்பதனை அவர்களுடன் மேற்கொண்டிருந்த உரையாடல் மூலம் அறிய முடிந்திருந்தது.
வடமாகாணத்தின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்தவர்களை சந்திக்க முடிந்திருந்தது.அவர்களில் அதிகமானோர் மனங்களில் உள்ள உருக்கும் சுபாவத்தின் செயற்பாடுகளை இலக்கு வைத்து தங்களை ஒழுங்கமைத்திருந்தனர்.
வறுமையால் பசியில் வாடுவது, உழைத்து உண்ண தன்னால் முடியவில்லை என உணர்த்த முற்படுவது, சிறுவயது பிள்ளைகளை பாதுக்காக்க பணம் தேவை என்பது, ஊனமுற்ற பிள்ளைகளை பராமரிக்கவும் அவர்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கும் என பண உதவிகளை கோருவது ஆகிய அடிப்படைகளை அவர்கள் பிரதிபலித்து இருந்தனர்.
ஒரு கால் இல்லாதவர்கள் அதனை காரணம் காட்டியிருந்தனர்.சிலர் தங்களின் நோய் நிலைமைகளை குறிப்பிட்டிருந்தனர்.இன்னும் சிலர் தங்களின் சிறு பிள்ளைகளை முற்படுத்தியிருந்தனர்.
இரத்தினபுரி யாசகர்
இரத்தினபுரியில் இருந்து வந்திருந்த ஊனமுற்ற பிள்ளையின் தந்தையொருவர் தன் பிள்ளையின் பராமரிப்புக்காக நிதி சேர்த்தவாறு இருந்தார்.
யாரிடமும் பேசாது மௌனமாக நின்றவாறு கையை நீட்டிக் கொள்வார்.பலர் கடந்து போக சிலர் அவரது பிள்ளை இருந்த சக்கர நாற்காலியில் கட்டியிருந்த பிளாஸ்டிக் கூடையில் பணத்தைப் போட்டுக் கொள்வார். இன்னும் சிலர் கடந்து சென்ற பின்னர் திரும்பி வந்து பணமிட்டுச் செல்வார்.
தின்பண்டங்களை விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அவர் தன்னை நிலைப்படுத்தியிருந்த வேளை அவரை நான் அவதானிக்க முடிந்தது.
அவருடனான உரையாடலின் போது இரு கைகள் மற்றும் கால்களும் ஊனமுற்றிருந்தன.விரல்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தன.கால் மற்றும் கைகள் முழுமையான ஆரோக்கியத்தோடு வளர்ந்திருக்கவில்லை.
பிள்ளைகளை பராமரிக்க தனக்கு போதியளவு வருமானம் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.பிள்ளையை விட்டுவிட்டு வேலைக்கு போவதும் தனக்கு முடியத காரியமாக இருப்பதாகவும் தான் இரத்தினபுரியில் இருந்து வந்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் இவர்கள் போன்றவர்களை அவர்களது கிராமத்தின் கிராம சேவகர் அல்லது சமூர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் என யாராயினும் ஒரு கிராம நிர்வாகத்தின் அரசுசார் நிர்வாகி ஒருவரூடாக தகவல்களைப் பெற்று உரிய உதவிகளை செய்து கொடுப்பதோடு அவர்களுக்கான உளவள ஆலோசனைகளையும் சரிவர கிடைப்பதை உறுத்திப்படுத்த வேண்டும்.
அத்தகைய ஒரு சூழல் அவர்களுக்கு இருக்கும் போது இரத்தினபுரியில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டிய துயரம் நேர்ந்திருக்காது என்பது வெள்ளிடை மலையாகும்.
உணர்வின் வலியை உதிர்ந்த பக்தர்
வறுமையின் வலியை தான் நன்றாக உணர்வதாகவும் ஆனாலும் நம்மிடையே உள்ள முயற்சியின்மையால் ஏற்படும் வறுமைக்கும் தான் வாய்ப்பளிக்கவில்லை எனவும் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தரின் கருத்தாக இருந்தது.
திங்கட்கிழமைகளிலும் ஏனைய திருவிழாக்களிலும் கண்ணகியம்மன் ஆலயத்தில் வரிசையாகவும் இராஜகோபுரத்தின் வாசலருகேயும் நின்றவாறு யாசகம் கேட்பது முகம் சுழிக்கச் செய்யும் செயற்பாடாகவே தான் நோக்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது போலவே ஒட்டுசுட்டான் தான்தோன்றியீசுவரர் சின்கோவிலிலும் தான் அனுபவப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனதை வருடும் காரணங்களை முற்படுத்தி யாசகம் கேட்கும் போது தன்னால் அவர்களுக்கு யாதேனும் கொடுக்காது வர நேரிடும் போது மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோவிலுக்கு போகும் போதெல்லாம் பிச்சையிடுவதற்கென்றும் பணம் எடுத்துச் செல்லுமளவுக்கு தனக்கு வசதியில்லை என்றும் எனினும் வறுமையில் பணத்தின் தேவை பற்றி தான் பட்ட துன்பத்தினை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
யாசகம் கேட்பவர்கள் ஆலய வாசலில் இருப்பதனை தவிர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.ஆலய நிர்வாகத்தினரும் இது தொடர்பில் உணர்ந்து செயற்பட வேண்டும்.
வறுமையிலும் மோசமானதாக மனப் பாதிப்புக்கள் இருக்கின்றன.அவற்றை ஓரளவுக்கேனும் ஆலய வழிபாடுகள் மூலம் சரிசெய்ய எண்ணி ஆலயங்களுக்குச் சென்றால் திரும்பி வரும் போது போகும் போது இருந்த மனக்கனத்திலும் அதிகமாகவே மனம் கனமேறியிருப்பதாக தான் உணர்வதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு நோக்கத்தக்கது.
யார் யாசகர்களை ஒழுங்குபடுத்துவது
நாட்டில் யாசகர்களின எண்ணிக்கையில் அதிகரிப்பு நிகழும் வண்ணமே நாட்டின் இன்றைய பொருளாதாரம் செல்கின்றது.
யாசகர்களையும் ஒரு நெருக்கடியாகவே கருதி செயலாற்றும் போது அவர்களை ஒழுங்கமைக்க வேண்டியதன் தேவை உணரப்படும்.
நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகசேவை மையங்கள், அறக்கட்டளைகள், அரசின் நிதியுதவி மையங்கள் என அதிகளவான உதவிகளைச் செய்யும் நிறுவனமயப்பட்ட செயற்பாடுகள் என பலவும் இயங்கி வரும் போதும் வறுமையை ஒழித்து யாசகம் பெறும் நிலையில் வாழும் சூழலை இல்லாது செய்து விட முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார முயற்சிகள் ஆண்டு தோறும் கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத காரணத்தால் அந்த முயற்சிகள் இலக்கை அடைவதில்லை.ஆயினும் ஒவ்வொரு வாழ்வாதார முயற்சியினையும் இலக்கை அடைந்து விட்டதாகவே அறிக்கைகளில் காட்டப்படுவதாக கிராமசேவகர் தன் வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருந்தார்.
கிராம சேவகர் மற்றும் நிகழ்வுகளின் ஏற்பாட்டு ஒழுங்கமைப்பாளர்கள் யாசகர்கள் தொடர்பில் கவனமெடுக்கும் போது அது பிரதேச செயலகங்களுக்கு அழுத்தத்தினை கொடுக்கும்.இதனால் யாசகர்களை ஏனையோருக்கு இடையூறின்றி செயற்பட வைப்பதற்கான மற்றும் யாசகம் எடுக்கும் சூழலை இல்லாதொழிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள் என அவர் மேலும் தன் முன்மொழிவை யும் குறிப்பிட்டிருந்தார்.