சுகவீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
பட்ஜெட் ஊடாக எமது அடிப்படை உரிமைகள் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.அதற்காக அரசாங்கத்தினை வலியுறுத்தி நாளை மறுதினம் 09ஆம் திகதி சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இணைத்தலைவர் லோகிதராஜா தீபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு, இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆதரவு வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று(07.11.2026) மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சுகவீன விடுமுறைப் போராட்டம்
இதன்போது கருத்து தெரிவித்த அவர், இந்த மாதம் ஒன்பதாம் திகதி அபிவிருத்தி உத்தியோகர்களாகிய நாங்கள் எமது தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடாக சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
கடந்த காலங்களில், அதாவது ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, மதிய வேளையின் போது அரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் அல்லது அரை மணித்தியாலத்தில் இருந்து ஒரு மணித்தியாலம் என்ற அடிப்படையில் நாம் எமது கோரிக்கைகளை முன்வைத்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் முன்பாக ஒரு அறவழியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

அந்த வகையில் அது பிரதானமாக சேவை பிரமாண குறிப்பொன்றை எமக்கு ஏற்படுத்திக் கொள்வதற்காக அந்த போராட்டம் அமைந்தது.
அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நாம் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி எதிர்வரும் திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை எமது தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஊடாக அறிவித்திருக்கின்றோம்.
சேவை பிரமாண குறிப்பு
எமது சேவை பிரமாண குறிப்பு தொடர்பாக கடந்த மூன்றாம் மாதம் அளவில் எமது தொழிற்சங்க கூட்டமைப்பானது அதன் நகலை தயாரித்து அமைச்சின் செயலாளர்கள், விசேடமாக ஜனாதிபதியின் செயலாளர், ஏனைய திணைக்களங்கள் சகலருக்கும் இது தொடர்பாக நாங்கள் வழங்கியிருந்தோம்.

அத்தோடு, எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் அதன் கட்டமைப்போடு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது சேவை பிரமாண குறிப்பு தொடர்பான நகலை வழங்கியிருக்கிறோம். எமது பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் முன்கூட்டியே அறிவித்திருந்தோம்.
இருந்தபோதிலும் இதுவரைக்கும் எமக்கான உரிமைகளை பெற்றெடுப்பதற்கான சேவைப் பிரமாண குறிப்போடு இணைந்ததாக காணப்படும் எமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரச்சனைகள் அபிவிருத்தி ஊழியர்களாகிய எங்களுக்குத் தீர்க்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.