திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு இந்த ஆண்டு 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று (28) மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அங்கு வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதன்போது, வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள்
இதன்போது, வைத்தியசாலையின் பௌதிக மற்றும் ஆளணி வசதிகள் குறித்தும், வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள் குறித்தும் வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அறுவை சிகிச்சை கூடம் ஒன்றை அமைப்பதற்கும், வைத்தியசாலை ஊழியர்களின் விடுதி வசதிகள், சமையலறை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உட்பட அத்தியாவசிய நிர்மாண பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் அவசரகால சேவைகளை வலுப்படுத்துவதற்கு மிக முக்கியமானதும், நீண்டகாலமாக முடங்கிப்போனது மான அவசர மற்றும் விபத்து (A&E) பிரிவின் கட்டுமான பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகளுக்கு எடுத்து கூறினார்.
புதிய இருதயவியல் பிரிவு
மேலும், இருதய பராமரிப்பு சேவைகள் குறித்து பிரதி அமைச்சர் கருத்து கூறும் போது, 4.2 பில்லியன் ரூபா செலவில், ஜெய்கா (JICA) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் புதிய இருதயவியல் பிரிவானது இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் மூலம், மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தால், கிழக்கு மாகாணத்தில் இருதய பராமரிப்பு சேவைகள் கணிசமான அளவில் மேம்படுத்தப்படும் என்றார். இந்த வைத்திய சாலையில் பழுதடைந்து காணப்படுகின்ற, பிரேதங்களை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டியை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் இதன்போது உறுதி அளித்தார்.
மாவட்டத்தின் சுகாதார சேவையை மேம்படுத்த, இந்த விஜயத்தின் போது, என்னுடன் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மருத்துவமனை இயக்குநர், ஆலோசகர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா



