பெருந்தோட்ட பகுதிகளுக்கான தாதியர் சேவை மாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photos)
பெருந்தோட்ட பகுதிகளுக்கான தாதியர் சேவையில்(midwife) மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதாரத் துறைக்கு பொறுப்பாக உள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாக பெருந்தோட்ட துறையின் சுகாதாரத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலர்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவைத் தீர்மானம்
'' இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் மருந்தகங்கள்
அரசாங்கத்தினால் உள்ளெடுக்கப்பட்டு தனி வைத்திய அலகாக மாற்றம் கொண்டுவர கடந்த
கால அரசாங்ககள் தீர்மானித்த போதிலும் அது இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை.
அதன் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அடிப்படை சுகாதார வசதிகளை மேற்கொள்ள பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தோட்ட வைத்திய அதிகாரி மருந்துகளை வழங்கும் அதிகாரம் இன்மையின் காரணமாக மக்கள் தங்களது அடிப்படை மருத்துவ வசதிகளை மேற்கொள்ள பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.
இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் இதற்கான மாற்று தீர்வுகளை பெறுவதற்கான வியூகங்களும் ஆராயப்பட்டன.
அந்த வகையில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 10 மருத்துவ நிலையங்களுக்கு சுகாதார அமைச்சின் ஊடாக வைத்தியர்களை வழங்க தீர்மானம் எட்டப்பட்டதுடன் அதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை பெறவும் முடிவு செய்யப்பட்டது.
தாதியர் சேவை
ஒரு மருத்துவ நிலையம் ஏறக்குறைய 10 தோட்டங்களை உள்ளடங்கியதாக இனம் காணப்பட்டதுடன் அங்கு வரும் வைத்திய அதிகாரிகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் மூலமாக அனைத்து வசதிகளையும் பெற்றுத் தரவும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் இடம் பெற உள்ளது.
இவ் வைத்திய அதிகாரிகள் தோட்டத்துறையில் மாத்திரம் பணியாற்ற முடியும் என்பதுடன் நேரடியாக சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுடன் செயல்படவும் உள்ளனர்.
மேலும் பெருந்தோட்ட பகுதிகளுக்கான தாதியர் சேவை (midwife) 3000 நபர்களுக்கு ஒருவராக இருந்து 1500 பேருக்கு ஒருவராக குறைவடைய உள்ளது.
இதன் மூலமாக சுகாதாரத் துறையின் முழு வீச்சும் மக்களுக்கு சென்றடையுவதுடன் போசணை குறைபாடு மருந்துகளை பெறுவது போன்றவற்றில் காணப்பட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும்.
மேலும் சிறுவர்களுக்கு தேவையான திரிபாஷா திட்டம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சென்றடைவது மிகக்குறைவாக காணப்படுகிறது.
தமிழ் மொழி பயிற்சி
முதன்முதலாக திரிபாஷா திட்டம் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தை அபிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுடன் இன்று அது ஏனைய பகுதிகளுக்கு சென்றடைகிறதே தவிர தோட்டப்பகுதிகளுக்கு கிடைக்கும் அளவு மிக மிக குறைவாக காணப்படுகிறது.
இதற்கு தீர்வாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக பெருந்தோட்டம் மனிதவள அபிவிருத்தி நிதியமும் இணைந்து திரிபோச சத்துணவு திட்டத்தை பெருந்தோட்டங்களில் காணப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது.
அது மாத்திரமன்றி பெருந்தோட்ட பகுதிகளை அண்டியுள்ள மாவட்ட வைத்தியசாலைகளில் மக்களுக்கு இலகுவாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள தமிழ் மூல அதிகாரிகளை நியமிப்பதற்கும், புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்கவும் இணக்கம் எட்டப்பட்டது.
சுகாதாரத்துறையில் பல ஆண்டுகளாக காணப்பட்ட மிகப்பெரிய சவால்களை தீர்ப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து உள்ளோம் இதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நிதியத்தின் ஊடாக எமது அதிகாரிகள் துரித கதியில் செயல்படுவர்.
மேலும் இந்த தீர்மானத்தை எட்ட உறுதுணையாக இருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெலவுக்கும் நன்றிகள்'' என பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெலவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதாரத் துறைக்கு பொறுப்பாக உள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அதன் பணிப்பாளர் நாயகம் லால்பேரேரா, சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டதுடன் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அஸேல குணவர்தன பெருந்தோட்டத்துறை மருத்துவ பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுபாஸ்கரன் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






