ஐஎஸ்ஐஎஸ் கைது விவகாரம் உறுப்பினர்கள்: சந்தேகம் வெளியிடும் இலங்கை பாதுகாப்பு படை
ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடையவராக தேடப்படும் ஒஸ்மான்ட் ஜெரார்ட் என்பவரே குறித்த நால்வரையும் கையாள்பவர் என இலங்கை பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், அவரை கைது செய்யும் நோக்கில் அவரை அடையாளம் காண்பிப்பவருக்கு 2 மில்லியன் ரூபா வெகுமதி வழங்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்தனர்.
அதேவேளை, தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒஸ்மான்ட் ஜெரார்ட் என்ற குறித்த நபர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
கடந்த மே மாதம் 20ஆம் திகதியன்று ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையதாகக் கூறி நான்கு இலங்கையர்களை, இந்திய அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முகமது நுஸ்ரத் சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் மின் சாதனங்களை இறக்குமதி செய்யும் தொழிலதிபராக செயற்பட்டு வந்துள்ளார்.
மேலும், நுஸ்ரத் என்பவர் கொழும்பில் இந்த இறக்குமதி பொருட்களை விற்பனை செய்து கொண்டு இயங்கி வந்துள்ளார்.
அதேவுளை, கடந்த 2020 செப்டம்பர் 16ஆம் திகதியன்று அவர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், 27 வயதான மொஹமட் நஃப்ரான் என்பவர், மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரபல பாதாள உலக குற்றவாளியான நியாஸ் நௌபர் என்ற பொட்ட நௌபர் என்பவரின் முதல் மனைவியின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வழக்குகள்
அத்தோடு, நஃப்ரான் எனப்படுபவர், இந்தியா மற்றும் துபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆடை பொருட்கள் மற்றும் சொக்கலட்டுக்களை இலங்கைக்கு எடுத்து வந்த விற்பனை செய்து வந்துள்ளதுடன் அவர் தனது 16 வயதில் தனது தாயுடன் இணைந்து இந்த வணிக முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த 2017ஆம் ஆண்டில், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் நஃப்ரான் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொழும்பு - மாளிகாவத்தையைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் பாரிஸ் என்பவர், புறக்கோட்டையில் வண்டி இழுக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளதுடன் அவர் கடந்த 2023 மார்ச் 11 மற்றும் அதே ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதிகளில் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பொலிஸார்
அதேசமயம், மற்றுமொருவரான மொஹமட் ரஸ்தீன் முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டு வந்துள்ளதுடன் அவர் கிரிஸ்டல் மெத் அல்லது ஐஸ் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், 2022 செப்டம்பர் 16ஆம் திகதியன்று ரஸ்தீன் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இந்தியாவின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, நான்கு பேரும் பாகிஸ்தானில் உள்ள அபு என்பவருடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த அபு அவர்களை ஊக்குவித்ததாகவும் இந்திய பொலிஸார் (Indian police) குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |