ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...
பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் 'சோல் பீச்' (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கியதில் மறைக்கப்பட்ட உண்மை கதையொன்றை புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,
சவேந்திர சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்தார் என்று குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ரிபா காதர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பழிவாங்கிய சம்பவம்
இருப்பினும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். அதாவது தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய போது ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கோட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால் பழி தீர்க்கும் முகமாக தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கினார்.
தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர், அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊடக பிரசாரத்திற்கு தேவையான கூட்டங்கள் அனைத்தும் 'சோல் பீச்' ஹோட்டலிலேயே நடைபெற்றன.
இந்த பிரசாரங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 'சோல் பீச்' ஹோட்டலே வழங்கியது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதும், "இதை நிரந்தரமாக்கிக்கொள்ள எனக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஷிரான் பாஷிக், "இந்த நேரத்தில் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தேசபந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனை நிராகரித்த பின்னர் தனக்கு உதவிய நபரை பழிவாங்குவதற்காக இந்த ஹோட்டலை இடித்தார். தான் கேட்ட பணம் கிடைக்காததால் பழிவாங்கும் நோக்கில் இதைச்செய்தார்.
அக்காலத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OIC) என பொலிஸில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, குடித்தது இந்த 'சோல் பீச்' ஹோட்டலில் தான். இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால், அதற்கு அடுத்ததாக உள்ள 'பரகுடா' (Barracuda) உணவகத்தில் பொலிஸாரால் சும்மா ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது என்றும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.