தேசபந்து விவகாரம்.. ரவிகரன் எம்பி முன்வைத்துள்ள கோரிக்கை
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டதைப்போல தமிழ் இனவழிப்பு, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களிலும் உடனடி நீதியை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (05.08.2025) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், "பொலிஸ் சார்ஜன் உப்புல் கொல்லப்பட்ட விவகாரத்தில் வெலிகம பொலிஸ்மூலம் குற்றவியல் விசாரணை நடாத்தப்பட்டது தவறெனவும், வெளிப்படைத்தன்மையின் பொருட்டுவேறு ஒருவரை நியமித்து விசாரிப்பதே ஏற்புடையதென பிரதிபொலிஸ்மா அதிபர் குணந்தாவடு நிசாந்த சொய்சா வாக்குமூலமளித்தார்.
இதனைப்போலவே தமிழ் இனவழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப்புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் உள்ளக விசாரணை தீர்வாக அமையாது பன்னாட்டு நீதிவிசாரணையே தேவை.
தமிழ் இனவழிப்பு
அரசியல் பல ஈடுபாடும் மக்கள் மயப்பட்ட அழுத்தமும் இருக்கும் போது விசாரணைகளை தொடங்கி உரியவர்களை பொறுப்புக்கூற வைக்கும் இலங்கை அரசின் திறனை அண்மைய விசாரணை அறிக்கை, அதாவது தேசபந்து தென்னக்கோனை பதவியில் இருந்து அகற்றுமாறு கோரும் குற்றச்சாட்டுகளுக்கான காரணங்கள் தொடர்பில் புலனாய்வு மற்றும் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அண்மைய இறுதி அறிக்கை பிரதிபலிக்கிறது.
இந்த நாட்டில் சிலருக்கே நீதியும் பாதுகாப்பும் உரிமைகளும் நிலைநிறுத்தப்படுவதோடு மற்றவர்களுக்கு நிரந்தரமான நியாயக்கேடும் அநீதியும் வழங்கப்படுவது வேதனையான உண்மை. இந்த விசாரணையும் அதையே சுட்டிக்காட்டுகிறது.
அதிகார முறைகேடுகளுக்கு எதிரான இப்படியான விரைவான விசாரணைகள், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வன்முறைகள் சார்ந்து இந்த நாட்டிலே நடைபெறுவதில்லை.
நூற்றுக்கும் அதிகமான எலும்புக்கூடுகளுக்குள் உறைந்துள்ள படுகொலைகள், இறுதிப்போரில் நம்பி உங்களிடம் ஒப்படைத்த எங்களின் உறவுகளுக்கான தேடல்கள், இறுதிப்போரிலே நிகழ்ந்தேறிய இனப்படுகொலைகள் உள்ளிட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு உங்கள் அரசுகள் ஏற்படுத்திய வன்முறைகளுக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் அதிகார வல்லாளுகைகளுக்கும் எப்போது விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது? எப்போது நீதி கிடைக்கவுள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




