29ஆம் திகதி அன்று இலங்கையை தாக்கவுள்ள புயல் : வெளியான எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுதினம் (29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்பொழுது சியாம்பலாண்டுவவுக்கு அண்மையில் மையம் கொண்டு காணப்படுகின்றது.
இது நாளை மறுதினம்(29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை நாளையே உறுதிப்படுத்த முடியும்.
நிலைமை இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்
மேலும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 01.12.2025 அன்று இலங்கையை விட்டு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாடு முழுவதும் கனமழை தொடக்கம் மிக கனமழை பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இன்று மிக கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்துக்கு கன மழை நாளை மறுதினம் வரை(29.11.2025) தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திற்கு இன்று காற்று மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்று மாலை அல்லது இரவு மழை கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. ஆறுகள் அவற்றின் கொள்ளளவைத் தாண்டி பாய்கின்றன. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மண்சரிவுகளும் இடம்பெறுகின்றன.
இந்த நிலைமை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது.
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்ற மல்வத்து ஓயா அதிக கொள்ளளவோடு பாய்கின்றது.
ஆகவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்வரும் 30.11.2025 வரை அவதானமாக இருப்பது அவசியம்.

கடந்த 24 மணித்தியாலத்தில் ( 26.11.2025 காலை 10. 00 மணி முதல் இன்று 27.11.2025 காலை 10.00 மணி வரை) வடக்கு(யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தவிர்த்து)மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மிகக்கனமழை கிடைத்துள்ளது.
நாட்டிலேயே அதிகமாக மட்டக்களப்பு உறுகாமம் பகுதியில் 302 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கடல் நீரேரிகளின் கொள்ளளவு நிறைவு பெற்று அவற்றினுடைய முகத்துவாரப் பகுதிகள் வெட்டிவிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மிக கன மழையும் மிக வேகமான காற்று வீசுகையும் எதிர்வரும் 30.11.2025 வரை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே மக்கள் இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு போதுமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தயார்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam