யாழில் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களையே சாரும் எனவும், குறிப்பாக யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகள் தொடர்பில் திணைக்களங்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரின் தலைமையில், ஆளுநரின் பங்கேற்புடன் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று (27) சிறப்பாக நடைபெற்றது.
மக்களின் அடிப்படைப் பிரச்சினை
யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 'தீவக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இக்கூட்டம் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது.

கடல் கடந்த தீவகப் பிரதேசங்கள் தொடர்பில் விசேடமானதொரு கண்ணோட்டம் அவசியமாகும்.
இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியான சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களை உரிய திணைக்களங்கள் எவ்வித காலதாமதமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
மீளாய்வு
மீண்டுமொரு முறை மீளாய்வு செய்யும் நிலைமையை உருவாக்கக் கூடாது' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், இது வழமையான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமல்ல. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் விடயங்கள் கூடத் திணைக்களங்களால் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.
எனவே, திணைக்களங்கள் இதனைக் கருத்தில் கொண்டு, இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும்.
தீவகப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இனியும் இடம்பெயரக் கூடாது எனில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.


பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan