கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் அடிப்படை கருத்து வேறுபாடு உள்ளது! டென்மார்க்
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் "அடிப்படை கருத்து வேறுபாடு" இருப்பதாக டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடனான நேற்றைய சந்திப்பு "வெளிப்படையானது ஆனால் ஆக்கபூர்வமானது" என்று லார்ஸ் லோக்கே ராஸ்முசென் கூறியுள்ளார்.
கருத்து வேறுபாடு
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தை "கைப்பற்ற வேண்டும்" என்று வலியுறுத்துவதை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
வளங்கள் நிறைந்த தீவை கையகப்படுத்துவதில் ட்ரம்ப் தனது ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலைப்பாடு ஐரோப்பா முழுவதும் நட்பு நாடுகளை உலுக்கி, நேட்டோ நாடுகள் மத்தியிலும் பதற்றங்களைத் தூண்டியுள்ளது.
இதற்கிடையில்,அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே நேற்று ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு ஒரு பெரிய திருப்புமுனையைக் கொண்டுவரத் தவறிவிட்டது.
உயர் மட்ட பணிக்குழு
இருப்பினும் அனைத்து தரப்பினரும் தன்னாட்சி பெற்ற டென்மார்க்கின் பிரதேசமான, கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு உயர் மட்ட பணிக்குழுவை அமைக்க ஒப்புக்கொண்டனர்.

இதேவேளை, ஆர்க்டிக்கில் ரஷ்ய மற்றும் சீன நலன்களை எதிர்கொள்ள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் கருத்தில் "உண்மையின் கூறு" இருப்பதாகவும் ராஸ்முசென் கூறியுள்ளார்.
ஆனால் கிரீன்லாந்தைச் சுற்றி ரஷ்ய மற்றும் சீன போர்க்கப்பல்கள் இருப்பது குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கள் "உண்மையல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.