மூன்று தினங்களுக்கும் மேலாக நீடிக்கும் காயச்சல் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை (Photos)
மூன்று தினங்கள் தொடர்ந்து காயச்சல் நீடிக்குமானால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைபெற்றுக்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பதில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஞானராஜா சஞ்ஜய் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றையதினம் கரையோர டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நுளம்பு பெருகும் இடங்கள்
இதன்போது பெரியகல்லாறு கரையோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு
பெருகும் வகையிலிருந்த இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.
காலநிலை மாற்றம்
தற்போது மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெரியகல்லாறு வைத்தியசாலை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை, களுவாஞ்சிகுடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொது அமைப்புகள் இணைந்து இந்த கரையோர டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









