வாழைச்சேனை சுகாதார அதிகாரி பிரிவில் டெங்கு பாதிப்பு! இருபது பேருக்கு சட்ட நடவடிக்கை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை- புதுக்குடியிருப்பு ,பேத்தாழை, நாசிவந்தீவு ,கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை டெங்கு பரவும் வகையில் இடங்களை வைத்திருந்த இருபது நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ,பேத்தாழை, நாசிவந்தீவு கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும் வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில்,பேத்தாழை கிராம சேவகர் பிரிவில் சுத்தப்படுத்தும் நிகழ்வு பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் கிராம சேவை அதிகாரி எம்.டிறோன் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களின் காணப்படும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வாழைச்சேனை,புதுக்குடியிருப்பு ,பேத்தாழை நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் இம்மாத ஆரம்பத்தில் நூற்றி அறுபத்தைந்து (165) நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இருபது (20) நபர்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ,பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் ,இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஏழு நாட்களுக்கு பின்னர் சுத்தம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் தெரிவித்துள்ளார்.