உயர் ஆபத்தான நிலையை எட்டியுள்ள நிலைமை! ஜனாதிபதி செயலாளரின் அவசர சுற்றறிக்கை
நாட்டில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோய் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், இது உயர் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனத் தலைவர்களுக்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பணிப்புரை
குறிப்பாக, மேல் மாகாணம் டெங்கு பரவல் அதிகமுள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், கட்டுமானத் தளங்கள் மற்றும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள், குடியிருப்பு வலயங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பொது இடங்கள் ஆகிய இடங்களை விசேட அவதானத்திற்கு உட்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் நுளம்பு பெருகுவதைத் தடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டியது அந்தந்த நிறுவனத் தலைவர்களின் நேரடிப் பொறுப்பாகும் எனச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் ஜூன் 26 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நாட்களில் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் பங்களிப்புடன் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட குழு நியமனம்
இதனைத் தொடர்ந்து, அரச நிறுவனங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கும், அவற்றை நெறிப்படுத்துவதற்கும் விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாதாந்த அறிக்கைகளை அந்தந்தப் பிரதேச மருத்துவ அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதன் ஒருங்கிணைக்கப்பட்ட சுருக்க அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.