கிழக்கை மிரட்டிய டெங்கு மரணங்கள்: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் கடந்த ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ். அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 ஆயிரத்து 300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயாளர்கள்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, "டெங்கு நோயால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களிலும் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 ஆயிரத்து 300இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
600 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள்
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,800இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் மட்டும் 600 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மார்ச் மாதம் 600 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 700 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகரம், உப்புவெளி மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலர்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் வைரஸ்
டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாகச் செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன.
(DEN 1, DEN 2 , DEN 3, DEN 4) டெங்கு தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சினுள் விரிந்து செல்வதுடன் சில நபர்களிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படமாட்டாது என்பதுடன் இன்னும் சிலரிடம் நோய் அறிகுறிகள் தென்படும்.
நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுள் பெரும்பாலானவர்களிடம் சாதாரண வைரஸ் காய்ச்சல் நிலைமை, டெங்கு காய்ச்சல் அல்லது அசாதாரண நோய் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை ஏற்பட முடியும்.
டெங்கு காய்ச்சல் காரணமாக ஆகக் கூடுதலாகக் காணக்கிடைப்பது டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை என்பதுடன் அசாதாரண நோய் அறிகுறியுடன் கூடிய டெங்கு நோய் நிலைமைகள் மிக அபூர்வமாகவே நிகழ்கிறது.
நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் தென்படுமாயின் (விசேடமாகக் காய்ச்சல் குறைகின்ற வேளையில்) கட்டாயமாக வைத்தியரின் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
* தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல்
* வயிற்று வலி
* கடுமையான தாகம்
* கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும்
* உணவு மீதுள்ள வெறுப்பு
* அசாதாரண குருதி வடியும் நிலைமை உதா: மாதவிடாய்ச் சுற்றின் போது அதிகமான குருதிப்பெருக்கு இடம்பெறல், குறித்த தினத்திற்கு முன்னர் மாதவிடாய்ச் சுற்று இடம்பெறல்.
நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்திய அறிவுரை பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
* கைகால்களில் குருதியற்ற மற்றும் குளிரான தன்மை
* அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமை
* தோலின் நிறம் மாற்றமடைதல்
* சிறுநீர் வெளியேறாமை அல்லது குறைவாகச் சிறுநீர் வெளியேறல்
* நடத்தையில் மாற்றம் – மயக்கம்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
