காணி அபகரிப்பு மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
வடக்கு, கிழக்கில் தமது பல கோரிக்கைகளை முன்வைத்து வெவ்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினமும் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முல்லைத்தீவு - வட்டுவாகல், கோட்டாபய கடற்படை முகாமிற்காக தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கில் நடைபெறும் அளவீட்டு நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (14.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினரால் அங்கு நின்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்களான வில்வராஜா மற்றும் சஜீவன் ஆகிய இருவரும் கடற்படை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு
வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நேற்று (14.12.2022) வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஆளுநரே மோசடிகளுக்கு ஆதரவா, வடக்கு கல்வியை திருடர்களின் கூடாரமாக்காதே, அடிமைச் சேவகம் புரியும் தொழிலாக ஆசிரிய தொழிலை மாற்றாதே, போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கடலட்டைப் பண்ணையை விரைவுபடுத்த வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணி நேற்று அன்னை மரியாள் தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பூநகரி பிரதேச செயலகத்தினை சென்றடைந்ததுடன், பூநகரி பிரதேச செயலரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணையை அமைப்பதற்கு
தீர்மானித்து, அதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு
சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ள கிராஞ்சிக் கடற்றொழிலாளர்கள், தமக்கான
அனுமதிகளை வழங்குவதற்கு தேவையற்ற காலஇழுத்தடிப்பு மேற்கொள்ளப்படுவதாக
குற்றஞ்சாட்டியதுடன், தமது ஆதங்கத்தினை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு
தெரியப்படுத்தும் வகையில் இந்த அமைதி முறையான பேரணியை மேற்கொண்டதாக
தெரிவித்துள்ளனர்.



