தம்முடைய காணிகளை மீட்டுத்தருமாறு கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு (VIDEO)
திருகோணமலை - மொரவெவ நாளாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு தமது சொந்த காணிகளை விட்டுச் சென்று இந்தியாவிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தங்களுடைய காணிகளுக்குள் செல்லவிடாமல் தடுப்பதால் தமக்குரிய காணிகளை அரச அதிகாரிகள் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாலாம் வாய்க்கால் பகுதியில் 83 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகள் யுத்த காலத்தின் போது கைவிடப்பட்ட நிலையில், இதனையடுத்து வேறு பிரதேசங்களிலிருந்து வந்தவர்களால் தற்போது குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் மொரவெவ பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்குரிய காணிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
எனினும் குறித்த காணிகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி கோரல விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரின்
புகைப்படங்களுடனான பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






