இராமேஸ்வரத்தில் கடற்தொழிலாளர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் (Video)
கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வர கடற்தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இராமேஸ்வரத்தில் நேற்றுமுன் தினம் (28.10.2022) நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிப்பதாவது, இராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் 3500 கடற்தொழிலாளார்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லைத்தாண்டி கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டு
இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி கச்சதீவிற்கும் நெடுந்திருக்கும் இடையே கடற்தொழில் ஈடுபட்ட மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகும் அதிலிருந்து 7 கடற்தொழிலாளர்களை எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர் அனைவரையும் எதிர் வரும் நவம்பர் 9ஆம் திகதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை கண்டித்து ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் கடற்தொழிலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட ஒரு விசைப்படகையும் 7 கடற்தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பாரம்பரிய இடத்தில் கடற்தொழிலில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும்.
தமிழக அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசாங்கம் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.
அதேபோல விடுபட்ட படகுகளுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிடிபட்டு இலங்கை வசம் இருக்கும் படகுகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசாங்கங்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், தங்கச்சிமடம் வலசை தெருவில் கடற்தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடற்தொழில் சங்கத் தலைவர்கள் , கடற்தொழிலாளர்கள் மற்றும்
சிறைபிடிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் உறவினர்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டு மத்திய மாநில அரசாங்கத்துக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து
முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



