விவசாய அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தூக்குத்தண்டனை கைதிகளுக்கு தங்களது இறுதி விருப்பத்தினை கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றபோதிலும்,விவசாயிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தினை ஜனாதிபதி வழங்காதது கவலைக்குரியது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாய அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உரத்தை வழங்கக் கோரியும் இன்று மாலை மட்டக்களப்பு- வவுனதீவில் விவசாயிகள் ஆர்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது விவசாயிகள் அமைச்சருக்கு எதிராகவும் , உரம் வேண்டியும் கோசங்களை எழுப்பியதுடன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அண்மையில் விவசாயிகள் தொடர்பில் தெரிவித்த கருத்திற்கும் இதன்போது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
கடந்த காலங்களில் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்போது உரத்தினை வைத்தும் கடத்தல் செய்ய நினைப்பதனால் விவசாயிகளே பாதிப்புக்குள்ளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமது உரப்பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வினை வழங்காவிடின் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மிக விரைவில் விவசாய அமைச்சருக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் அருவடை காலத்தில் விவசாயிகள் பாரிய நஸ்டத்தினை எதிர்கொள்ளும்போது அதற்காக எந்த அரசாங்கம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்ததோ அந்த அரசாங்கம் இந்த நாட்டில் பாரிய பின்னடைவினை சந்திக்கும் எனவும் அதற்கு தயாராக இருக்குமாறும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்த கருத்தானது சரியானது. ஏனென்றால் அவருடன் ஒட்டி வாழுபவர்கள் சேதனப்பசளை உற்பத்திக்காக வந்திருக்கின்றார்கள்.
குளத்தின் களியை அள்ளிக்கொண்டு இந்த சேதனப்பசளையினை உற்பத்தி செய்கின்றார்கள்.அவர்கள் மில்லியனர்களாக மாறுவார்கள்.நாங்கள் பிச்சைக்காரர்களாக மாறுவோம்.விவசாய குடும்பங்கள் நடுவீதிக்கு வரும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


