சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்!பதற்றமான சூழல் (VIDEO)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மண்டபத்திலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளதுடன்,மண்டபத்தினை ஆர்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன் கூட்டம் பதற்றமான சூழ்நிலையில் இடம்பெற்று வருகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.