கண்ணிவெடி அகற்றும் பணி: ஓராண்டுக்கான ஒப்பந்தம் ஜப்பானுடன் கைச்சார்த்து(Photo)
டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியின் அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் இன்று(28) கைச்சார்த்திடப்பட்டுள்ளது.
பளை முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் இந்த ஒப்பந்தம் இன்று காலை 8.30 மணியளவில் கைச்சார்த்திடப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஸி கிடேகி குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு, நன்கொடையாளர் சார்பில் கையொப்பமிட்டுள்ளார். அவருடன் ஜப்பான் தூதரகத்தின் 2ம் நிலை செயலாளர் இகராசி டோருவும் கையொப்பமிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
டாஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குனரும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளருமான ஆனந்த சந்ரசிறி மற்றும் செயற்திட்ட முகாமையாளர் சுனில் ஆரியசேன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஜப்பான் அரசு சுமார் 244 மில்லியன் ரூபா நிதி உதவியினை வழங்கியுள்ளது.
ஜப்பான அரசின் இந்த நன்கொடை மூலம் டாஸ் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் வட பிராந்தியத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் தனது Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தினூடாக 681,812 அமெரிக்க டொலர்கள் (சுமார் 244 மில்லியன் ரூபாய்) நன்கொடையை DASH அமைப்புக்கு வழங்கியுள்ளது.
டாஸ் நிறுவனத்திற்கு 19.06.2022 வரை அனைத்து நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் 15.82 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடிகள்
இதன்போது 106,304 மனிதருக்கு தீங்கேற்படுத்தும் கண்ணிவெடிகளும், 245 கனரக வாகனங்களுக்கெதிரான கண்ணிவெடிகளும், 26,019 வெடிக்கும் நிலையில் உள்ள எச்சங்களும், 164,115 சிறிய ஆயுத வெடிமருந்துகளும் கண்டு அழிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் 13வது வருடமாக டாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளிற்கு ஐப்பான் அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
ஜப்பான் நாட்டின் நிதி உதவியினால் மாத்திரம் 6.4 சதுர கிலோமீற்றர் பரப்பு கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகுதி பணிக்கான அடுத்த ஆண்டு நிதி உதவிக்கான ஒப்பந்தமே இன்று இரு தரப்பாலும் கையொப்பமிடப்பட்டுள்ளது.
“டாஸ் நிறுவனத்திற்கு ஜப்பான் வழங்கும் இந்த உதவியானது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் 135 கண்ணிவெடி அகற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துள்ளது. அதற்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி கூறுவதாக” டாஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்-சுழியான்

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
