முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் மக்களிடம் கையளிப்பு
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) மற்றும், கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha), கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran) ஆகியோர் கண்ணி வெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணியினை பொது மக்களிடம் கையளித்துள்ளனர்.
இந்நிகழ்வு இன்று (03) காலை 10 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உரையாற்றுகையில்,
இன்று காலை தான் தெற்கு பகுதியில் இருந்து இங்கு வந்தேன். பாடசாலைகளிற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் செல்வதனை கண்டேன்.
தெற்கு பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்லும் போது சில அறிவுறுத்தல்கள், பதாதைகள் ஆசிரியர்களால் வழங்க்படுகின்றது.
ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லை அது மிகவும் சந்தோசமான விடையமாக உள்ளது. அதேபோன்று இங்கு விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபடுவதனையும் அவனதானித்தேன்.
சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இங்குள்ள விவசாயிகள் பெரும் பங்காற்றுகின்றனர்.
தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டம். தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர்.
இங்கிலாந்து, சுவீடன், நோர்வே உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து இங்கு புதைகக்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சுபீட்சத்தை நோக்கிய இலங்கை என்ற தொனிப்பொருளில் மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்.
பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வருட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்படும்.
அதன் ஊடாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கான பணம் அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியும். நான் எதிர்பார்க்கின்றேன் மிக குறுகிய காலத்திற்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளிலிருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கிடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், முன்னரங்க பிரதேசமாகவும் முகமாலை பிரதேசம் காணப்பட்டது.
இதன் காரணமாக அதிகளவு கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிக்காத வெடிபொருட்கள் நிறைந்த பிரதேசமாக காணப்பட்ட முகமாலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் தற்போது கண்ணி வெடி அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசமாக உறுதிப்படுத்தப்பட்ட 316 ஏக்கர் பரப்பளவு நிலம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.





