ஜனாதிபதித் தேர்தலை பாராட்டிய ஐரோப்பிய ஒன்றியம்: பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்ய கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தல் குறித்த தமது விரிவான பகுப்பாய்வை வெளியிட்டுள்ள, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு, நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறியுள்ளது.
தனது இறுதி அறிக்கையை அந்த குழு நேற்று (17) கொழும்பில் வெளியிட்டுள்ளது.
அதில், முக்கிய சாதனைகளை எடுத்துரைத்ததுடன், எதிர்கால தேர்தல் செயல்முறைகளை மேம்படுத்த 16 பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இது இலங்கையின் ஜனநாயகக் கொள்கைகளுக்கான சர்வதேச உறுதிப்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை பார்வையாளருமான நாச்சோ சான்செஸ் அமோர் இந்தத் தேர்தலை இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் மீள்தன்மைக்கு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில், இலங்கையின் குடிமக்கள் ஜனநாயக செயல்முறைக்கு தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.
அதே நேரத்தில் இலங்கை தேர்தல் ஆணையகமும், சுதந்திரமாகவும் உறுதியுடனும் செயல்பட்டு, அனைத்து முக்கிய தேர்தல் கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தது என்று அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
இந்தநிலையில், அரசியலில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தேர்தல் பிரசாரங்களின் போது அரசு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை பரிந்துரையாக எடுத்துக்காட்டியுள்ளது.
அத்துடன்,அறிக்கையின் குறிப்பிடத்தக்க பரிந்துரைகளில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதும் அடங்கியுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களை இரத்து செய்யுமாறும், ஐரோப்பிய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |