கொழும்பு தேசிய மருத்துவமனையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள MRI சேவைகள்! நோயாளர்கள் அவதி
கொழும்பு தேசிய மருத்துவமனையில் MRI பரிசோதனைச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் பரிசோதனைகளுக்காக இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் காலி கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையின் சில MRI பிரிவுகளில் நாளொன்றுக்கு 10 முதல் 12 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
MRI பரிசோதனைகள்
இதனால் கொழும்பு தேசிய மருத்துவமனையின் 81, 9 மற்றும் 10ஆம் இலக்க விடுதிகள் உள்ளிட்ட நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

MRI பரிசோதனைகள் தாமதமடைவதால் திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் தலா சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு MRI இயந்திரங்கள் உள்ள போதிலும், அவை முழுமையான திறனில் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடனடி விசாரணை
அரச மருத்துவமனைகளில் பரிசோதனைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நோயாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் சுமார் ஒரு இலட்சம் ரூபா செலுத்தி MRI பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, அரச மருத்துவமனைகளில் உள்ள MRI வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
YOU MAY LIKE THIS