கொள்கலன் விடுவிப்பில் தாமதம் : தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிப்பதில் கால தாமத நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுமார் 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் காரணமாக சுங்க அதிகாரிகள் அனைத்து கொள்கலன்களையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் முடிவெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காணமாக இவ்வாறு கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பினரின் அழுத்தங்கள்
தற்பொழுது ஒவ்வொரு கொள்கலனையும் வெளியேற்ற குறைந்தது ஏழு மணிநேரம் பிடிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது முன்னர் வெறும் இரண்டு மணி நேரத்தில் முடிந்து வந்ததுடன் மிகுந்த வேகமான செயல்முறையாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய சர்ச்சைக்குப் பின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கடும் எச்சரிக்கைகளை பெற்ற சுங்க அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பினரின் அழுத்தங்களுக்கு அஞ்சாது செயற்படுமாறு சுங்க அதிகாரிகளை கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கலன்களில் வெடிபொருட்கள்
மேலும், விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் வெடிபொருட்கள் இருக்கவில்லை என சுங்க அதிகாரி சீவலி அருக்கொட அண்மையில் வெளியிட்ட கருத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்கலன்கள் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படாது விடுவிக்கப்பட்டன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த ரெட் சேனல் ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணினி முறை. இறக்குமதி வரலாறு உள்ளிட்ட காரணிகளைப் பார்த்து சந்தேகத்திற்குரிய போக்குவரத்துகளை அடையாளம் காண்கிறது. இந்த முறை 'ரெட் சேனல்' வழியாகச் செல்ல வேண்டுமெனக் கூறிய போதிலும், அதனை எவ்வாறு கடந்து வெளியேறியது என்பதற்கான பதில் தேவை” என அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



