க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் விநியோகத்தில் தாமதம்! பரீட்சைகள் திணைக்களம் உடனடி நடவடிக்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் விநியோகத்தில் தாமதம் என கூறப்பட்டு சர்ச்சைக்குள்ளான பட்டிருப்பு பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த மேற்பார்வையாளர் முதல் அலுவலக பணியாள் வரை அனைவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களம் இந்த அதிரடி நடவடிக்கையை அன்றையதினமே மேற்கொண்டிருந்தது.
பரீட்சை ஆரம்பமாகிய முதல் நாள் காலையில் இடம்பெற்ற பாடப்பரீட்சைக்கு இரு வினாப்பத்திரங்களும் காலை 8.30க்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஒரு வினாப்பத்திரம் தாமதமாக வழங்கப்பட்டிருந்ததாக இச்சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
குறித்த சர்ச்சை தொடர்பாக பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எ.மகேந்திரகுமார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து பிராந்திய பரீட்சைகள் இணைப்பாளர் மேற்கொண்ட விசாரணைகள் அனைத்தும் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.
அதேவேளை, அன்று பிற்பகலில் அங்கு கூடிய பெற்றோர்கள், மாணவர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமாரிடம் சென்று, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் முதல் அனைவரையும் மாற்ற வேண்டுமென போர்க்கொடி தூக்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் சம்பவ இடத்துக்குச் சென்று ,சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், பரீட்சைத் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜீவராணி ஆகியோரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
அதனையடுத்து உடனடியாக பரீட்சை நிலைய மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், மேலதிக மேற்பார்வையாளர், மண்டப நோக்குநர்கள், பணியாள் உள்ளிட்ட அனைவரையும் இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த பட்டிருப்பு மகா வித்தியாலய பரீட்சை நிலையத்துக்கு புதிதாக
மேற்பார்வையாளர் தொடக்கம் பணியாள் வரை நியமிக்கப்பட்டு, பரீட்சை சுமுகமாக
நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



