பாதுகாப்புத்துறை முதலீட்டுத் திட்டம் தாமதம் - பிரித்தானிய இராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை
ரஷ்யாவினால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பிரித்தானிய தனது பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்கான கால அவகாசம் குறைந்து வருவதாக அந்நாட்டின் இராணுவ தலைமை தளபதி ரிச்சர்ட் நைட்டன் எச்சரித்துள்ளார்.
நாட்டின் 'பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்' பல மாதங்களாகத் தாமதமாகி வரும் நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிபிசி வானொலிக்கு அவர் அளித்த பேட்டியில், ரஷ்யா பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டி அச்சுறுத்தல்களை அதிகரித்து வருவதாகவும், பிரித்தானிய தனது பாதுகாப்புக்கான செலவினங்களை அதிவேகமாக அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வான்வெளியில் ரஷ்யாவின் ஊடுருவல்கள், சைபர் தாக்குதல்கள், நாசவேலைகள் மற்றும் தொழில்நுட்பங்களைத் திருடும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவுக்கு ஆபத்து
பனிப்போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தை விட தற்போது பிரித்தானியாவுக்கு ஆபத்துகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ உபகரணங்கள் மற்றும் சேவைகளுக்கான நிதியை முறைப்படுத்தி, ஆயுதப் படைகளை எந்நேரமும் போருக்குத் தயாரான நிலைக்கு மாற்றுவதே இந்த பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், அரசாங்கத்திற்குள் நிலவும் பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆண்டு முதல் இத்திட்டம் முடங்கியுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் 28 பில்லியன் பவுண்டுகள் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, ட்ரோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றிற்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜூலை 7-ஆம் திகதி நடைபெறவுள்ள நேட்டோ (NATO) மாநாட்டிற்கு முன்னதாக இந்த முதலீட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும், நாம் வாழும் தற்போதைய காலகட்டம் மிகவும் ஆபத்தானது மற்றும் ஸ்திரமற்றது என்றும் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார். பாதுகாப்புச் செலவினங்களை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதமாக உயர்த்தப் போவதாக பிரதமர் உறுதியளித்திருந்தாலும், அதற்கான போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என்ற விமர்சனங்களும் அவர் மீது எழுந்துள்ளன.
பொதுமக்கள் கவனத்திற்கு..! கொழும்பை சுற்றியுள்ள 5 பகுதிகளுக்கான நீர் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு