மன்னாரில் தீபாவளி கொண்டாட்டம் கலையிழந்தது
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் கோவிட் தொற்று பரவல் காரணமாகவும் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) மன்னார் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக பொருட்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பொருட்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் இம்முறை தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
அதே நேரம் கோவிட் தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் சிறிய அளவிலான விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மக்கள் குறைந்த அளவிலேயே ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



