இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி: புள்ளிவிபரவியல் திணைக்களம் எச்சரிக்கை
இந்ந ஆண்டின்(2023) இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.1சதவீதத்தால் வீழ்ச்சிக்கண்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரண்டாவது காலாண்டிற்கான கணக்கியல் மதிப்பீடுகளை வெளிப்படுத்திய திணைக்களம், விவசாயத் துறையில் வளர்ச்சி காணப்பட்டதாகவும், ஆனால் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.
விவசாயத் துறையில் வளர்ச்சி
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,597,441 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டில், இந்த பெறுமதி 2,680,074 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த காலாண்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 3.6சதவீத வளர்ச்சியாகும்.
தானிய சாகுபடி, செடி வளர்ப்பு, நெல் சாகுபடி, விவசாய ஆதரவு சேவைகள், தேயிலை, மரக்கறி மற்றும் பழ சாகுபடி, கடல் மீன்பிடித்தல் மற்றும் விலங்கு பொருட்கள் போன்றவற்றில் வளர்ச்சி விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேயிலை கைத்தொழிலின் அறுவடை
ஆனால் கணக்கியல் மதிப்பீடுகளின்படி, தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் சில சரிவு உள்ளது. கைத்தொழில் துறையில் முன்னைய வருடத்தின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 11.5சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், சேவைத் துறை 0.8% பின்வாங்கியது. அங்கு, நிதிச் சேவைகள் 18.8 சதவீதமும், தொழில்முறை சேவைகள் 9.3 சதவீதமும், தகவல் தொழில்நுட்ப சேவைகள் 8.5சதவீதமும், தொலைத்தொடர்பு சேவைகள் 4.4சதவீதமும், மற்றும் சுகாதார சேவைகள் 2.6 சதவீத பின்வாங்கலைப் பதிவு செய்துள்ளன.
இதேவேளை, தேயிலை கைத்தொழிலின் அறுவடை கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.