விரைவில் தேர்தல் நடத்த தீர்மானம்! தேர்தல்கள் ஆணையகம் அறிவிப்பு
எதிர்வரும் வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்ற கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் தேர்தல் ஆணையகத்திற்கு கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரம்
மேலும், “உள்ளுராட்சி தேர்தலானது ஏற்கனவே 1 வருடத்திற்கு காலதாமதமாக்கப்பட்டுள்ளது, எவ்வாறாயினும் செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பின்னர் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணையகத்திற்கு கிடைக்கபெறும்.
அதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடத்த முடியும்.
திகதி குறிப்பிடல்
எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வாக்காளர் பட்டியலை சான்றுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் ஏனைய நடவடிக்கைகளுக்கான திகதிகளையும் கருத்தில் கொண்டே தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.