ஆபத்தான நிலையில் உள்ள பாடசாலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகளின் மண்சரிவு அபாயத்தை கட்டுப்படுத்த பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது மீண்டும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NRBO)தெரிவித்துள்ளது.
அதன்படி, சமீபத்தில் நடத்தப்பட்ட இடர் மதிப்பீட்டு ஆய்வில், இந்த பாடசாலைகள் நேரடியாக நிலச்சரிவுகளுக்கு ஆளாகியுள்ளன என்பதை அடையாளம் கண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பணிப்பாளர் நாயகம் பொறியாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை
தற்போது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பாடசாலை வளாகங்கள் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்த தயாராகி வருவதுடன், அவ்வாறு செய்ய முடியாத பாடசாலைகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் வேறு எந்த பாடசாலையும் ஆபத்தில் இல்லை என்பதை தர மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆபத்தான பாடசாலைகள் மீண்டும் ஆய்வு
மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட மதிப்பீட்டு ஆராய்ச்சி அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி அமைச்சகம் இது தொடர்பிலான பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த நாட்களில் ஆபத்தான நிலையில் உள்ள பாடசாலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அந்தப் பாடசாலைகள் குறித்து எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், கல்வி அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.