ஜெனிவாவிற்கு செல்லும் முன்னர் அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்: வெளியான அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர முன்மொழிந்த நிலையில் பின்பற்றப்படாத, 'உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை'யை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு செல்வதற்கு முன்னர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018 அக்டோபரில், அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்த அமைப்புக்கான அடிப்படையை உருவாக்கும் 26 அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
தற்காலிக விசாரணை ஆணைக்குழுக்கள்
உயிர் இழப்பு, சேதம்,அல்லது சொத்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதன் காரணமாக ஏற்படும் விளைவுகள் தொடர்பாக விசாரணை செய்து பரிந்துரைகளை வழங்குவதே இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என அறியப்படும் ஒரு சுயாதீன நிறுவனத்தின் நோக்கமாக கூறப்பட்டது.
கடந்த காலங்களில், பரணகம ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, உடலகம ஆணைக்குழு, மஹாநாம திலகரத்ன ஆணைக்குழு போன்ற பல தற்காலிக விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அந்த ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை அமுல்படுத்த தவறின.
இதன் காரணமாக,மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது அல்லது இலங்கை மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பது அல்லது அவசியமான நிர்வாக சீர்திருத்த தலையீடுகளை அடையாளம் கண்டு மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
சுயாதீன அமைப்பாக செயற்படல்
இந்தநிலையில் குறித்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையானது, சுயாதீன அமைப்பாக செயற்படும்.
இதன் மூலம் இனம் அல்லது மதம் பாராமல் அனைத்து இலங்கை குடிமக்களும், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்கள், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள்,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது உதவும்.
உள்நாட்டு கலவரங்கள், அரசியல் அமைதியின்மை அல்லது ஆயுத மோதல்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும்.
தேசிய நல்லிணக்கம், சமாதானம், இணை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.
கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம்
அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் கடுமையான மீறல்கள் பற்றிய விசாரணைக்கும் இந்த பொறிமுறை நீடிக்கப்படும் என்று அடிப்படையிலேயே இந்த பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.
எனினும், 2020 இல் நல்லாட்சி அரசாங்கம் வெளியேறியதால், அத்தகைய ஆணைக்குழுவை அமைக்க முடியாது என்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், அப்போதைய வெளியுறவு அமைச்சரும் தற்போதைய பிரதமருமான தினேஸ் குணவர்த்தன அதனை அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பு நிறுவப்பட்டால்,தமிழீழ விடுதலை புலிகளின் குடும்பத்தினருக்கும் நட்ட ஈடுகள் செல்லும் என்று கருத்தை முன்வைத்தே கோட்டாபய அரசாங்கம் அதனை நிறுத்தியுள்ளார்.
இருப்பினும் தற்போது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புடன் மனித உரிமை மீறல்களும் தொடர்புப்பட்டிருப்பதால், அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை மீண்டும் அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.