வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை, இடைநிறுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், இந்தத் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதற்கு, வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர், எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவிக்கின்றார்.
கோவிட் - 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது.
இந்த நிலையிலேயே, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி என்பன வழமைக்குத் திரும்பியதன் பின்னர், ஏனைய வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த விடயம் குறித்து வாகன இறக்குமதியாளர்களுடன் தாம் கலந்துரையாடியதாகவும், இதன்போது அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும், நிதி அமைச்சின் செயலாளர், எஸ்.ஆர் ஆட்டிகல மேலும் தெரிவித்துள்ளார்.