தமிழ்த் தேசியத்தின் பேரபலத்தை சிதைத்து சமஷ்டியை எதிர்பார்ப்பது ஏமாற்று அரசியல்
ஈழத் தமிழரின் தமிழ்த் தேசிய அரசியலின் பேரப்பலத்தை சுயலாப அரசியலுக்காக சிதைத்து கட்சிக் கட்டமைப்பையும் பதவி ஆசைக்காக துண்டாடி விட்டு, பேரினவாத சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டித் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறுவது மிகப் பெரும் அரசியல் ஏமாற்று என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சுதந்திர இலங்கையின் இதுவரை கால தேர்தல்களில் சிங்கள கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் சமஷ்டி என்ற சொல்லை தமிழர்களுக்கு சாதகமாக தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது வாய்மூலமாகவே குறிப்பிட்ட வரலாறு இல்லை.
அவ்வாறு ஒன்று நடந்தால் அது சிங்கள பேரினவாதத்தில் அதிசயம் நிகழ்ந்ததாகவே பார்க்கப்படும்.
தேசியத் தலைவர் பிரபாகரன் மிகப் பெரும் பலத்துடன் நிழல் அரசாங்கத்தை நடாத்திக் கொண்டு மாவீரர் தின உரையில் சுயாட்சி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அதனை ஏற்க மறுத்தால் வெளியக சுயநிர்ணய உரிமையை கோருவதை தவிர வேறு வழி இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதனை சர்வதேச ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்தது.
தற்போது பதவிக்காகவும் தேர்தல் நலனுக்காவும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைத்து விட்டு ஒரு கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களே தனித் தனியாக ஜனாதிபதியை சந்தித்து தமக்கான வரப்பிரசாதங்களை பெற்று விட்டு சமஷ்டி தீர்வுவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுபவரை ஆதரிப்பதாக கூறுவது மிகவும் வேடிக்கையான அரசியல்“ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |