தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை!
திருகோணமலை- தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியில் தனது தந்தையைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22.10.2026) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, தனது தந்தையான கைலாசப்பிள்ளையைப் பொல்லால் அடித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் அடிப்படையில், குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் குற்றவாளிக்கு எதிராகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
இதற்கமைய, தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கைலாசப்பிள்ளை வினோதரன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றத்தில் இறுதியாகத் தனது கருத்தைத் தெரிவித்த குற்றவாளி, மது போதையில் தனது தந்தையைக் கொலை செய்ததாகக் குறிப்பிட்டதுடன், தன்னை மன்னித்து, தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதியிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அரச சட்டத்தரணிகளான ஷெஹான் முஸ்தபா மற்றும் செஷான் மஹ்பூப் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.