ஈரான் ஜனாதிபதியின் மரணம்! மட்டக்களப்பில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) திடீர் மரணம் காரணமாக இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பிலுள்ள (Batticaloa) அரச திணைக்களங்களில் இலங்கையின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இன்றைய தினம்(21.05.2024) தேசிய துக்க தினமாக அறிவித்து தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவித்திருந்தது.
தேசிய துக்க தினம்
அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இன்றைய தினம் (21) தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
ஈரானின் (Iran) வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் உலங்கு வானூர்தியில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஈரான் ஜனாதிபதி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை
ஈரான் நாட்டு ஜனாதிபதியின் மரணம் காரணமாக இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த வெளி விவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அதிகாரிகள் ஹெலிக்கொப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர்.
அவர்களின் மறைவை தொடர்ந்து உலகளாவிய ரீதியிலும் இலங்கை ரீதியிலும் இன்று துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தங்களது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்காக சம்மாந்துறை பிரதேச மக்களால வியாபார தளங்கள், உணவு சாலைகள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |