பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை! பயங்கரவாத செயல் என பொலிஸார் அறிவிப்பு
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல் இருப்பதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸ் (69), எஸ்செக்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொலைச் சந்தேகத்தின் பேரில் 25 வயதான பிரித்தானியர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் தனியாக செயற்பட்டதாக பொலிஸ்துறை நம்புகிறது, ஆனால், இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.