அரசாங்கம் விளையாடும் கொடிய விளையாட்டின் சோகம் நெருங்கிவிட்டது! சஜித் பிரேமதாச
அரசாங்கம் விளையாடும் கொடிய விளையாட்டின் சோகம் நெருங்கிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொடூரமான கோவிட் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் இருந்தாலும், மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டதாக செயற்படவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை சுகாதார விஷேட நிபுணர்களின் தீர்க்கமான எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பற்ற, தன்னிச்சையான அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே செயல்படுத்தி வருகிறது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்திற்கு நாடு முழுவதும் அல்லது, முக்கியப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படாவிட்டால், இலங்கையில் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 30,000 ஆக உயரும் என்று எதிர்வு கூறியுள்ளது.
இந்த பேரழிவு தருணத்தில் இருக்கும் கடுமையான ஆபத்தை கருத்தில் கொண்டு, இலங்கையின் வல்லுநர்கள் நாட்டை ஒரு குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், ஒரு நாளைக்கு இறப்புகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டினாலும்,இனம்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும், தாம் எடுக்கும் முடிவுகளிலிருந்து அரசாங்கம் சிறிதளவேனும் விலகவில்லை என்பது தெளிவாகிறது.
தொற்று மற்றும் இறப்பு என்பது எண்களின் விடயம் சார்ந்த ஒரு சூதாகவே அவர்களுக்கு புலப்படுகிறது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட, கோவிட் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ளதாகவும், 250 க்கும் மேற்பட்ட இறப்புகள் உள்ளதாகவும் மருத்துவமனைகளின் அதிகாரப்பூர்வமற்ற தரவுகள் கிடைக்கப்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
இத்தகைய பேரழிவு இருந்தபோதிலும், கோவிட் பரவலுக்கான குற்றச்சாட்டை அரசாங்கம், மக்கள் மீது சுமத்த முயற்சிக்கிறது.
மக்களின் மரணத்தை அரசியலாக்கத் தயாராக இருக்கும் ஒருவரைத் தவிர இந்த நேரத்தில் நாட்டைத் திறந்து வைக்க யாராலும் முடிவெடுக்க முடியாது.அந்தளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 80% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்று அரசாங்கம் கூறி மக்கள் மீது அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
பொருளாதாரம் குறித்த ஒரு பயத்தை உருவாக்கி,நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் ஒரு முடிவை எடுக்காதுள்ளது.
பொருளாதாரம் அல்லது ஒட்சிசன்" என்ற இரண்டில் எதை விட எது முக்கியமானது என்னவென்று புரியாத அரசாங்கத்திடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




