அதிகாரிகளுக்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விதித்துள்ள காலக்கெடு
வைத்தியர்கள் மற்றும் நாட்டின் பொது சுகாதார அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அறிவிக்க அதிகாரிகளுக்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் 48 மணி நேர அவகாசம் விதித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சுகாதாரத் துறையின் உண்மையான சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ளதால், இலவச சுகாதார சேவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே பல முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தும் அவை கவனிக்கப்படாதது தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரின் அவசர தலையீடு
அத்துடன், சுகாதார அமைச்சர் சில தீர்வுகளை முன்மொழிந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு இல்லாததால் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.
எனவே, காலக்கெடுவுடன் கூடிய திட்டம் அறிவிக்கப்படாவிட்டால், புதன்கிழமை (26) நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தில் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என இன்று நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலைமை மோசமடைவதைத் தடுக்க ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் அவசரமாக தலையிட வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |